Thursday, April 17, 2014

சிந்தாமணிக் கடலில் ஒரு சிறுபயணம்!

image description 
 
ஐம்பெருங்காப்பியங்களில் கதை அடிப்படையில் காலத்தால் மூத்ததும் காப்பியத்திற்கான இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதுமான தலைசிறந்த நூல் ‘சீவக சிந்தாமணி’ ஆகும். சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களைத் தழுவி இக்காப்பியத்தைச் சமண முனிவரான திருத்தக்க தேவர் தமிழில் இயற்றியுள்ளார். ’சிந்தாமணி’ என்பதற்கு நெஞ்சில் பொதிந்துவைத்துக் காக்கவேண்டிய தேவருலக மணி என்று பொருள் கூறுவர்; அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்றதொரு காப்பியம் என்னும் பொருளில் இந்நூலுக்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பிய ஆசிரியர் என்கின்றனர் தமிழ்ச் சான்றோர்.  இந்நூலின் சிறப்பை நோக்கும்போது இப்பெயர் இதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமே என்பதில் சற்றும் ஐயமில்லை.

இக்காப்பியத்தின் தலைவனாகிய ’சீவகனுக்கு’ அவனுடைய தாயாகிய ‘விசயை’ முதன் முதலாக இட்டு விளித்த பெயர் ’சிந்தாமணி’ என்பதே. ’சீவகன்’ என்னும் பெயர்  பின்னர் வானொலியாகத் (அசரீரி) தோன்றிய 'சீவ' என்னும் வாழ்த்துச்சொல் கேட்டு ’கந்துக்கடன்’ என்னும் வணிகன் (சீவகனின் வளர்ப்புத் தந்தை) இட்ட பெயரே என்பது இக்காப்பியம் கூறும் செய்தியாகும்.

மனித வாழ்வின் பண்பாகவும், பயனாகவும் கருதப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் இச்சிந்தாமணிக் காப்பியம் இனிதே எடுத்துரைப்பதனால் இதனை ’முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள்’ என்றும் கூறுவர்.

சிந்தாமணியை ’விருத்தப்பா’ என்னும் யாப்புநடையில் திருத்தக்க தேவர் அழகுற அமைத்துள்ளார். இவ்விருத்தப்பா சிறந்த ஓசைநயமும், சொல்லழகும் உடையது. செய்யுள் இயற்றுவதிலே ’விருத்தம்’ என்னும் ஓர் புதிய பாதையை முதன்முதலில் இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை திருத்தக்க தேவரையே சாரும். அதற்குப்பின் வந்த இலக்கியங்கள் தேவரின் பாணியையே (பெரும்பாலும்) பின்பற்றி அதில் வெற்றியும் கண்டன எனலாம்.

இவ்விருத்தப்பாவை தேவருக்குப் பிறகு பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர் கம்பரே ஆவார்; அவருடைய கம்பராமாயணம் முழுவதும் விருத்தப்பாவில் படைக்கப்பட்டுப் பெரும் புகழையும், வரவேற்பையும் இன்றளவும் தமிழ்கூறு நல்லுலகில் பெற்றிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. கம்பருக்கு ‘inspiration’ திருத்தக்க தேவரே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை அல்லவா? ‘சிந்தாமணிக் கடலில் சிறிது முகந்துகொண்டேன்’ என்று கம்பநாடனே கூறியுள்ளதாக ஒரு செவிவழிச் செய்திகூட உண்டு.

இனி, சீவக சிந்தாமணிக் காப்பியம் குறித்துச் சில செய்திகள் நம் சிந்தனைக்கு…
சிந்தாமணியில் நாமகள் இலம்பகம் தொடங்கி முத்தி இலம்பகம் ஈறாக மொத்தம் 13 இலம்பகங்கள் உள்ளன. இலம்பகம் என்பது அத்தியாயம் என்பதுபோல் காப்பியத்தின் உட்பிரிவைக் குறிப்பதாகும். இந்நூலில் மொத்தம் 3145 பாடல்கள் உள்ளன.

காப்பியத்தின் முதல் பகுதியாக வருவது ’நாமகள் இலம்பகம்’. இவ்விலம்பகத்தில் ’ஏமாங்கதம்’ என்றழைக்கப்படும் நாட்டின் இயற்கை வளமும், அந்நாட்டை ஆண்ட மன்னன் சச்சந்தன் (சீவகனின் தந்தை), விசயை (சீவகனின் தாய்) ஆகியோரின் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களும் அழகிய பாடல்கள் வடிவிலே விளக்கப்பட்டுள்ளன.

அரசனாகிய சச்சந்தன் அவனுடைய அமைச்சனான கெடுமதி படைத்த கட்டியங்காரனால் அநியாயமாகக் கொல்லப்பட்டது; கருவுற்றிருந்த அரசமாதேவி ’விசயை’ மயிற்பொறி எனும் வானவூர்தி ஒன்றில் பறந்து சென்று அரண்மனையில் பிறக்கவேண்டிய அரசிளங்குமரனான சீவகனைச் சுடுகாட்டில் ஈன்றது; பின்பு கந்துக்கடன் என்ற வணிகன் குழந்தை சீவகனைப் பத்திரமாக எடுத்துச்செல்வதைக் கண்டபின் அவள் துறவறம் பூண்டது எனப் பல துன்பியல் நிகழ்வுகளை வரிசையாகப் பட்டியலிட்டு அவலச்சுவையை நாம் முற்றாகச் சுவைக்குமாறு செய்துவிடுகின்றது இந்நாமகள் இலம்பகம். எனினும் இதில் இடம்பெற்றுள்ள ஏமாங்கத நாட்டின் இயற்கை வளம் கூறும் பாடல்கள் தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளைகளாக இனிக்கவே செய்கின்றன; அவற்றிலிருந்து ஒன்று நாம் சுவைக்க…

”காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி  வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென்று இசையால்திசை போயது உண்டே.” (நாமகள் இல: பாடல்: 31)

நன்றாகக் காய்த்த தென்னைநெற்றானது (தேங்காய்) தான் கீழே வீழும்போது கமுகின் உச்சியிலுள்ள தேன்போலும் இனிய நீரையுடைய குலையைக் கீறி, பலாப் பழங்களைப் பிளந்து பின்னர்த் தேமாங்கனிகளைச் சிதறச்செய்து, வாழைப் பழங்களையும் சிந்தச் செய்யும் வளம்பொருந்திய நாடு ஏமாங்கதம் என்று இந்நாட்டின் வளம் சுவைபடக் கூறப்பட்டுள்ளது எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

நாமகள் இலம்பகத்தை அடுத்து வரும் இலம்பகங்களில் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களைத் தன் பல்வேறு திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்திக் காப்பிய நாயகன் சீவகன் மணம் செய்துகொள்வது விரிவாகப் பேசப்படுகின்றது. இத்தனைத் திருமணங்களை நாயகன் (அலுக்காமல்!) செய்துகொள்வதாலேயே இந்நூலுக்கு ‘மணநூல்’ என்ற சிறப்புப்பெயரும் உண்டு. பின்னர்த் தன்னருமைத் தந்தையைக் கொன்று ஏமாங்கத நாட்டைக் கைப்பற்றிய கொடுங்கோலனான கட்டியங்காரனைத் தன் தாய்மாமன் கோவிந்தனின் துணையோடு போரில் வீழ்த்தித் தன் நாட்டை மீண்டும் கைப்பற்றுகின்றான் சீவகன்; நாட்டின் மன்னனாகி நல்லாட்சி புரிகின்றான். நன்மக்கட்பேறு வாய்க்கப் பெறுகின்றான்.

இக்காப்பியத்தைப் படிப்போர்க்கு ’ஒரு சமணத் துறவி அறக்கருத்துக்களையும், துறவுநெறியையும் வலியுறுத்திக் காப்பியம் படைப்பதை விடுத்துக் ‘காமச்சுவை’ மிகுந்த ஓர் காப்பியத்தை இயற்றுவானேன்?’ என்ற ஐயம்கூட எழலாம். தேவர் இக்காப்பியத்தை இயற்றியதற்கான காரணமாகச் சொல்லப்படுவது….ஒரு சமயம் திருத்தக்க தேவரிடம் மற்ற புலவர்கள், ’துறவியான உம்மால் துறவறக் கருத்துக்களை மட்டுமே பாட இயலும்; அகப்பொருள்சார் பாடல்களைப் பாட இயலாது’ என்று இகழ்ந்துகூற அதனைப் பொய்யாக்கவே அவர் ‘அகப்பொருள்’ செய்திகள் செறிந்த இக்காப்பியத்தைப் படைத்தார் என்று கூறுகின்றனர் அறிஞர் பெருமக்கள். கவிஞர் என்றானபின் காதலைப் பாடவேண்டிய கட்டாயம் காவியுடை தரித்தவர்க்கும் வந்துவிடுகின்றது பாருங்கள்!

சிந்தாமணியின் கதைப்போக்கினைக் கூர்ந்து நோக்கும்போது அஃது திருமால் அவதாரக் கதைகளில் ஒன்றான கண்ணன் கதையையே பெரிதும் ஒத்திருப்பதை நம்மால் உணரமுடிகின்றது. கண்ணன் ஆயர்பாடியில் கோபியர்களுடன் ’இராச லீலைகள்’ பல நிகழ்த்தினான்; போர் செய்தான்; அரசாட்சி செய்தான்; அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவினான்; மன்னுயிர் ஓம்பினான். இத்தனைத் தொழில்களும் செய்துகொண்டே அவன் உலகப் பற்றின்றி மெய்வாழ்க்கை நடத்திக் காட்டினான். அதுபோலவே இக்காப்பியத் தலைவன் சீவகனும் பல மகளிரை மணக்கின்றான்; போர் செய்கின்றான்; அரசாளுகின்றான்; மக்களைத் தீங்கின்றிக் காக்கின்றான். இத்துணைச் செயல்களுக்கு மத்தியிலும் அவன் வாழ்வின் நிலையாமையை நன்குணர்ந்தவனாய் ’படநாகம் எப்படித் தன் தோலை உரிக்குமோ’ அதுபோல் உலகப்பற்றை உரித்துவிட்டுத் தன் மனைவியர் எண்மருடனும் துறவு பூணுவதாகவும், தவமியற்றி வீடுபேற்றை அடைவதாகவுமே காப்பியத்தை முடித்துள்ளார் ஆசிரியர்.

இக்காப்பியத்தின் இறுதிப் பகுதியாகிய ’முத்தி இலம்பகம்’ பல அரிய அறக்கருத்துக்களை, வாழ்வியல் உண்மைகளை எடுத்தியம்பி மனித மனத்தை பக்குவப்படுத்துகின்றது. ஒழுக்கம் என்பதற்கு விளக்கம் கூறும் ஓர் இனிய பாடல்..

”உள்பொருள் இதுவென வுணர்தல் ஞானமாம்
தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம்
விள்ளற இருமையும் விளங்கத் தன்னுளே
ஒள்ளிதின் தரித்தலை யொழுக்கம் என்பவே.” (முத்தி இல: பாடல்: 2845)

உண்மைப் பொருள் எதுவென உணர்தலே ஞானம் எனப்படும். அப்பொருளின் தன்மை இது எனத் தெளிந்திடுதல் காட்சியாகும்; அத்தகைய ஞானத்தையும், தெளிந்த காட்சியையும் ஒருவன் தன் மனத்திலே சிறப்புற நிலைபெறச் செய்வதே ஒழுக்கம் ஆகும் என்கிறார் திருத்தக்க தேவர். ஞானம், காட்சி, ஒழுக்கம் இம்மூன்றினையும் மும்மணிகள் (இரத்தினத்திரயம்) என்பர் சமணர்கள். இப்பாடலின் கருத்தை நோக்கும்போது,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்: 355) 
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (குறள்: 351)

என்ற இரு குறள்கள் நம் நினைவுக்கு வருகின்றன அல்லவா?

இவ்வினிய தமிழ்க் காப்பியத்தைக் கற்று அதன் சுவையில் மனத்தைப் பறிகொடுத்த வெளிநாட்டுத் தமிழறிஞர் ஜி.யு. போப் அவர்கள் கிரேக்க மொழியின் மாகாவியங்களான ‘இலியட், ஒடிசி’ ஆகியவற்றிற்கு இணையானது இச்சிந்தாமணிக் காப்பியம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ’தேம்பாவணி’ என்னும் தீந்தமிழ்க் காவியம் படைத்த வீரமாமுனிவர், இக்காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர் ’தமிழ்க் கவிஞருள் சிற்றரசர்’ என்று வியந்து பாராட்டியுள்ளார். தொல்காப்பியத்திற்கும், பத்துப்பாட்டிற்கும் அற்புதமான உரை வரைந்தவரும், தமிழ்ச் சான்றோரால் ’உச்சிமேல் வைத்துப் போற்றப்படுபவருமான’ பெரும்புலவர் நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு அழகிய உரை எழுதிச் சிறப்பித்துள்ளார். இவ்வாறு எண்ணரும் சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்டொளிரும் ஒப்பற்ற காப்பியமாம் சீவக சிந்தாமணியை நாமும் படித்தின்புறுவோமே!



சித்திரைச் செல்வனும் நானும்!

(தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சித்திரைக்கும் எனக்கும் நிகழ்வதாக எழுதப்பட்ட ஓர் கற்பனை உரையாடல்)
 
அதிகாலை நேரம். வாசல்கதவு பலமாகத் தட்டப்படும் ஓசைகேட்டது. உறங்கிக்கொண்டிருந்த நான் மெல்ல எழுந்து கண்ணைக் கசக்கியபடியே வாசல் கதவைத் திறந்தேன். பார்த்தால்….என்னெதிரில் ’கோடி சூரியப் பிரகாசத்தோடு’ ஓர் மனிதர் நின்று கொண்டிருந்தார்!

தலையிலே பொற்கிரீடம், பொன்வண்ண உடைகள், தோளிலே உத்தரீயம் என்று கம்பீரமாக நின்றிருந்த அந்த மனிதரைப் பார்த்து, ”ஐயா! நீங்கள் யார்? இதுவரை நான் உங்களைப் பார்த்ததில்லையே?” என்று வினவினேன்.
  
புன்முறுவல் பூத்த அம்மனிதர் ’மேகலையார்’ நீங்கள்தானே? என்றார்.

இவ்வளவு மரியாதையுடன் பெயரின் இறுதியில் ‘ஆர்’ விகுதி சேர்த்து ஆ(யா)ரும் என்னை இதுவரை அழைத்ததில்லையா…அதனால் மிகுந்த ஆச்சரியத்துடன் நான் அவரைப் பார்த்து ‘மேகலை’ நான்தான் நீங்கள்…? என்று இழுக்க, அவரோ, ”அம்மணி! என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களை நானறிவேன்; இனியும் புதிர் எதற்கு..? நான்தான் ”சித்திரைச் செல்வன்” என்றார்.

சித்திரையே என் வீடு தேடி வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நான், ”வரவேண்டும் வரவேண்டும்!” என் குடிசையில் தங்கள் பாததூளி பட்டது அடியாள் செய்த பாக்கியமே! என்று அவரை வரவேற்று அழைத்துச்சென்று உள்ளேயிருந்த இருக்கையில் அமரச் செய்தேன்.

வீட்டை நோட்டம் விட்டவண்ணம் அமர்ந்திருந்தவரிடம், “உங்கள் பிறந்தநாளான இன்று நீங்கள் என் வீட்டிற்கு வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இன்று நீங்கள் இங்குதான் விருந்து சாப்பிடவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.

சித்திரைச் செல்வன் முகத்தில் பயத்தின் அறிகுறி தென்பட்டது. “என்ன விருந்தா?” என்று அதிர்ந்த அவர், “அதனால் என் உடலுக்கு ஏதும்…?” என்று பீதியோடு கேட்க, பெரிய சமையல் எக்ஸ்பர்ட் என்று என்னை நினைத்துக் கொண்டிருந்த எனக்கு மிகுந்த அவமானமாய்ப் போய்விட்டது.

”என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? நான் நன்றாகச் சமைப்பேன்; நளபாகத்தின் அனைத்து பாகத்தையும் ஒன்றுவிடாமல் அறிந்தவள்; அதனால் நீங்கள் தைரியமாக இங்கே சாப்பிடலாம்” என்று கூறி அவரது பயத்தைப் போக்க முயன்றேன். :-)

விருந்தாளி முகத்தில் இப்போது சற்றே பயம் தெளிந்தது. “உங்கள் சமையல் புலமை(!!) பற்றி அறியாததால் ஏதோ வாய்தவறிக் கூறிவிட்டேன்; தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்று என்னைச் சமாதானப்படுத்திவிட்டு, “அதுசரி, இன்று நீங்கள் எனக்குத் தரப்போகும் விருந்தைப் பற்றி என்னிடம் தெரிவிக்கலாம் அல்லவா? அல்லது அது பரம ரகசியமா?” என்றார்.

“பரம ரகசியமும் இல்லை….திருமால் ரகசியமுமில்லை; அது ஊரறிந்த ரகசியம்தான்! இதோ உங்களுக்கான என் ’மெனு லிஸ்ட்’ என்று கூறி நான் அவருக்குத் தரவிருக்கும் பதார்த்தங்களைப் பட்டியலிட்டேன்.
சாதம்
பல காய்கறிகளுடன் கூடிய ‘அரைத்துவிட்ட’ ஸ்பெஷல் சாம்பார்.
உருளைக்கிழங்கு ரோஸ்ட்
உளுந்து வடை
பயற்றம்பருப்புப் பாயசம் என்று நான் சொல்லச் சொல்ல வாய் ஊறிப்போன செல்வனார் ”அப்புறம்?” என்றார் ஆவலாக.

அடுத்து வரப்போவதுதான் சித்திரை ஸ்பெஷல் ’மாங்காய்ப் பச்சடி’ என்றேன்.

”மாங்காய்ப் பச்சடி நான் ஏற்கனவே நிறையச் சாப்பிட்டிருக்கிறேனே… அதிலென்ன ஸ்பெஷல்” என்றார் சிறிதே ஏமாற்றத்துடன்.

”பொறுங்கள் சித்திரையாரே…இது வழக்கமான மாங்காய்ப் பச்சடி இல்லை. வழக்கமான பச்சடியில் வெறும் மாங்காய்த் துண்டுகள், காரப்பொடி, உப்புக் கலவைதான் இருக்கும். ஆனால் இன்று நான் செய்யப்போகும் மாங்காய்ப் பச்சடி அப்படிப்பட்டதில்லை; இது அறுசுவைகளின் கலவை” என்றேன்.

“ஓ” அப்படியா? இதை எப்படிச் செய்வீர்கள் என்றார் ஆர்வம் மேலிட.

”வேகவைத்த மாங்காய்க் கதுப்புகள், வெல்லம், வறுத்த வேப்பம்பூ, அரிந்த பச்சைமிளகாய், கரைத்துவிட்ட புளி, சிறிது உப்பு என்று எல்லாம் சேர்த்துச் சித்திரைப் புத்தாண்டன்று மட்டும் நாங்கள் செய்யும் ஸ்பெஷல் பச்சடியல்லவோ இது!” என்றேன்.

”அப்படியா சமாசாரம்? சித்திரைப் புத்தாண்டன்று மட்டும் இதைச் செய்வதன் நோக்கம் என்ன?” என்றார் செல்வனார் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்.

”ஐயா! புத்தாண்டு என்பது ஆண்டின் தொடக்கம் அல்லவா? அன்றைய நாளை நாம் எவ்வாறு ஆரம்பிக்கிறோமோ அதுபோலவே அவ்வருடம் முழுவதும் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை எங்களுக்கு. அதனால்தான் இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கிய இப்பச்சடியைச் செய்கிறோம்” என்றேன்.

”பேஷ் பேஷ்!” என்றவர் எனக்கு ஒரு சந்தேகம் என்று இழுத்தார்.

”கேளுங்கள்!”

”வாழ்க்கை எப்போதும் இனிப்பாகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதானே மனித இயல்பு. அப்புறம் ஏன் உங்கள் பச்சடியில் கசப்பைச் சேர்க்கிறீர்கள்” என்றார் குழப்பத்தோடு.

”நல்ல கேள்விதான் ஐயா! ஆனால் அதிகப்படியான இனிப்பும் திகட்டிவிடுமே….அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே? அதுமட்டுமல்லாமல் வாழ்வில் எல்லா சுவைகளையும் கண்டால்தான் மனித மனம் பக்குவப்படும்; அவன் மனிதனாக வாழ்வான். அதற்காகத்தான் எங்கள் முன்னோர்கள் மிகுந்த முன்யோசனையோடு இப்படி ஓர் பச்சடியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றேன் பெருமிதத்தோடு.

”பலே…பலே! உங்கள் முன்னோர்கள் வெகு கெட்டிக்காரர்கள்தான்!” என்று பாராட்டிய சித்திரைச் செல்வனார் அடுத்து என்ன கேட்பது என்று யோசித்தவராய் அமர்ந்திருந்தார்.

’இதுதான் சமயம்’ என்று நான் பேச்சை ஆரம்பித்தேன்.

”ஐயா… தங்களிடம் கேட்பதற்கு எனக்கும் சில கேள்விகள் இருக்கின்றன கேட்கலாமா?”

”தாராளமாகக் கேளுங்கள்” என்றார் அவர்.

இந்த ஆண்டை நாங்கள் ‘ஜய’ வருடம் என்ற பெயரால் அழைக்கிறோம்; இவ்வாண்டின் பலன்கள் எப்படி இருக்கின்றன. பெயருக்கு ஏற்றபடி இவ்வாண்டு எங்கள் மக்களுக்கு வெற்றிகளைத் தரும் ஆண்டாக இருக்குமா? என்றேன் கவலையோடு.

”இதோ இந்த ஆண்டுக்கான பலன்!” என்று தான் கொண்டுவந்திருந்த பையிலிருந்து ஒரு மஞ்சள் புத்தகத்தை எடுத்துப் பிரித்துப் பாடத் தொடங்கினார் கர்ணகடூரமான குரலில்.

”ஜய வருடந் தன்னிலே செய்புலங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ் விளையும் – நயமுடனே
அஃகம்பெரிதா மளவில் சுகம்பெருகும்
வெஃகுவார் மன்னரிறை மேல்”

”ஐயா பாட்டு நல்லா இருக்கு…இது நீங்க எழுதினதா? என்றேன் அப்பாவியாக.

”சரியாப் போச்சு! இது உங்கள் முன்னோர்கள் எழுதிய (பஞ்சாங்கத்திலுள்ள) ’ஜய வருடத்திற்கான பலன்களைச் சொல்லும் வெண்பா’.

”அப்படியா ஐயா! இது தமிழ்ப் பாட்டுன்னு தெரியுது ஆனா..இதோட பொருள் என்னன்னு தெரியலயே? என்று கௌரவம் சிவாஜி ஸ்டைலில் நான் கேட்கவும், புன்னகை சிந்திய சித்திரைச் செல்வனார் ”இதுக்குத்தான் பள்ளிக்கூடத்தில தமிழ்ப் பாடத்த ஒழுங்காப் படிக்கணுங்கறது” என்று சொல்லிவிட்டுப் பாட்டின் பொருளை விளக்க ஆரம்பித்தார்.

”அதாவது இந்த வருடம் வயல்களிலெல்லாம் நல்ல விளைச்சல் இருக்கும்; செல்வங்கள் பெரிதாகும்; அதனால் சுகம் பெருகும்” என்றார்.
”இன்னொரு முக்கியமான விஷயம்” என்று குரலைத் தாழ்த்தினார்.

”என்ன ஐயா அது?” என்று நானும் கிசுகிசுப்பான குரலில் கேட்டேன்.

”நாட்டிலே அரசியல்வாதிகளெல்லாம் ஆட்சி எனக்கு வேண்டும்..உனக்கு வேண்டும் என்று போட்டிபோடுவார்கள்!” என்றாரே பார்க்கலாம்.

ஆச்சரியத்தில் வாயைப் பிளந்த நான், ”அது எப்படிச் செல்வனாரே இவ்வளவு துல்லியமாப் பஞ்சாங்கத்தில நாட்டு நடப்ப எழுதியிருக்காங்க…? நீங்க சொன்ன மத்ததெல்லாம் உண்மையோ இல்லையோ..இது நூத்துக்குநூறு உண்மை. இப்ப எங்க நாட்டுல பாராளுமன்ற எலக்‌ஷன் நடக்குது. அரசியல்வாதிகள் அத்தனை பேரும் பிரதமர் பதவிக்கு அடிச்சுக்கிட்டுல்ல நிக்குறாங்க” என்ற என்னைப் பார்த்துச் சிரித்த செல்வனார் ”உங்கள் முன்னோர்களின் தீர்க்க தரிசனத்திற்கு இது மற்றுமோர் எடுத்துக்காட்டு!” என்று கூறியவாறு இருக்கையைவிட்டு எழுந்தார்.

”என்ன ஐயா அதுக்குள்ள எழுந்துட்டீங்க….இன்னிக்கு நீங்க எங்க வீட்டுல விருந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்!” என்றேன் நான் விடாப்பிடியாக.

”முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது; அதைமுடித்துவிட்டு மதியச் சாப்பாட்டிற்குக் கட்டாயம் வருகிறேன்” என்றுகூறிப் புறப்பட்டவரை, ”ஐயா…ஐயா..இன்னும் ஒரே ஒரு கேள்வி” என்று கூறி நிறுத்தினேன்.

”என்ன?”

”அரசியல்வாதிகளெல்லாம் பதவிக்குப் போட்டி போடுவாங்கன்னு சரியாச் சொன்னீங்க! ஆனா…நல்லாட்சி மலருமா? மக்கள் பிரச்சனை தீருமா?” அதையும் சொல்லிட்டுப் போங்கய்யா!”

”அது நீங்கள் போடும் ஓட்டில் இருக்கிறது; உங்கள் ஓட்டுரிமையைச் சரியாகப் பயன்படுத்திச் சரியான நபரைத் தேர்ந்தெடுங்கள்!” என்றார் கம்பீரமாக.

”என்ன இது? இவரும் அரசியல்வாதிகள் பாணியில் பேசறாரே!” என்று மனத்தில் எண்ணிக்கொண்டு அவருக்கு விடைகொடுத்தேன்.

இதோ….இன்னும் கொஞ்ச நேரத்தில் மதியச் சாப்பாட்டிற்கு வந்துவிடுவார் சித்திரையார். மாங்காய்ப் பச்சடியோடு கூடிய விருந்தை அவருக்குத் தயார்செய்ய நானும் (அடுக்களைக்குக்) கிளம்பிவிட்டேன்.  :-))


வானினும் உயர்ந்த காதல்!

அருவிநீரில் இருவிழிகள் சிவக்க நீராடினர் தலைவியும், தோழியும். பின்பு மலைவழியே நடந்துவந்துகொண்டிருந்தபோது தலைவியை வம்புக்கிழுக்க நினைத்த தோழி. ’எப்படி இருக்கிறார் உன் காதலர்?’ என்று கிண்டலோடு கேட்டுவிட்டுத் தலைவியின் முகத்தைப் பார்த்தாள்.

”நன்றாக இருக்கிறார்!” என்றாள் தலைவி.

”இத்தனை நாட்களாக உன்னோடு பழகிவருகிறாரே…உன்னைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா அவருக்கு?’ – இது தோழி.

’நிச்சயம் செய்துகொள்வார்’ என்று நம்பிக்கையோடு பேசிய தலைவியை இடைவெட்டிய தோழி, ”உன்னருமைக் காதலர் நாளைக் கடத்துவதைப் பார்த்தால் எனக்கென்னவோ கொஞ்சம் ஐயமாகவே இருக்கிறது. உன்னை அவர் உண்மையாகத் தானே காதலிக்கிறார்..? இல்லை அவருக்குக் காதல் செய்வதென்பது பொழுதுபோக்கா? என்று கேட்டுவிட, தலைவிக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது.

”எங்கள் காதலையா சந்தேகிக்கிறாய்?” அதன் நிலைத்த தன்மையை அறிந்தால் இவ்வாறு நீ பேசமாட்டாய்” என்று கூறித் தோழியை முறைத்தாள்.

தொடர்ந்து தலைவியே பேசட்டும் என்று மௌனம் காத்த தோழியைப் பார்த்து, ”என் காதல் நிலத்தைவிடப் பெரியது” என்று கைகளை அகல விரித்தாள்.

”அப்படியா?” ஆச்சரியம் தோழியின் குரலில்.

”வானைவிட உயர்ந்தது” என்றாள் தலைவி தொடர்ந்து.

வியப்பில் விரிந்தன தோழியின் விழிகள்.

”அதுமட்டுமா? கடலைவிட ஆழமானது” என்று தலைவி பரவசமாகக் கூறி முடிக்க வாயடைத்துப்போனாள் தோழி.

தலைவியும் தோழியும் பேசிக்கொண்டிருந்ததை (சிறைப்புறத்தே) மறைந்திருந்த தலைவனும் கேட்டான்; தலைவி தன்மீது கொண்டிருக்கும் உண்மைக் காதலின் அளவையறிந்து மகிழ்ந்தான்.

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள அவ்வினிய பாடல்…

நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே. (குறுந்: 3)

விளக்கம்: மலைப் பக்கத்திலுள்ள கரிய கொம்புகளையுடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமான மலை நாட்டுத் தலைவனோடு யான் செய்த நட்பானது பூமியைக் காட்டிலும் அகலம் உடையது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது என்கிறாள் தலைவி. இங்கே உயர்ந்த பொருள்களான பூமி, வானம், கடல் ஆகியவறைத் தன் காதலோடு அவள் தொடர்புபடுத்தித் தன் காதலின் உயர்வை, சிறப்பைத் தோழிக்குப் புலப்படுத்துகின்றாள்.

எலிசபெத் ப்ரௌனிங் எனும் ஆங்கிலப் பெண்கவிஞரின் “How Do I Love Thee?" என்ற ஆங்கிலக் கவிதையில் இடம்பெற்றுள்ள,
 "How do I love thee? Let me count the ways.
 I love thee to the depth and breadth and height
 My soul can reach, when feeling out of sight...
"
என்ற வரிகள் நாம் மேலே கண்ட குறுந்தொகைப் பாடலின் வரிகளை ஒத்திருக்கின்றன அல்லவா?
  
 

உள்ளங்கவர் கள்வன்!

பெருமூச்செறிந்தபடி எங்கோ வெறித்த பார்வையோடு வீட்டில் அமர்ந்திருந்தாள் தலைவி. அதுகண்டு வருத்தமடைந்த தோழி, ”அடி பெண்ணே! இப்படி விட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரந்தான் உட்கார்ந்திருப்பாய்; என்ன நடந்தது? உண்மையைச் சொல்!” என்று வினவ, தலைவியின் கண்களிலிருந்து ’குபுக்’ என எட்டிப் பார்த்தது கண்ணீர்! பதறிப்போன தோழி…”என் கண்ணே அழாதே! உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டாதா? அழுகையை நிறுத்து. நடந்ததைச் சொல்!” என்று கேட்டவாறு தலைவியின் கூந்தலை அன்பாக வருட, தலைவி தொடர்ந்தாள்…..


மாமூலனார் பாடல்கள் – 13 : சி.இலக்குவனார் 

”உன்னிடம் சொல்வதற்கென்ன…என் உயிர்த் தோழியிடம்தானே என் உயிர்க் காதலையும் வெளியிட முடியும்! அன்றொரு நாள் நாம் அருவியில் நீராடிவிட்டுத் திரும்பும்போது யானை ஒன்று துரத்திவந்ததே உனக்கு ஞாபகம் இருக்கிறதா?”

”யானையையும் ஞாபகம் இருக்கிறது. அந்த யானையிடமிருந்து நம்மைக் காப்பாற்றிய ’காளை’யையும் ஞாபகம் இருக்கிறது” என்று கூறிவிட்டுக் குறுகுறுவென்று தலைவியைப் பார்த்தாள் தோழி.

”பலே குறும்புக்காரியாயிற்றே நீ” என்று அவள் கன்னத்தைத் தட்டிய தலைவி, ”அந்தக் காளை பின்பு அடிக்கடி என்னைச் சந்திக்க வந்தான்…உனக்குத் தெரியாமல் நானும் அவனும் பல முறை சந்தித்தோம்.”

”அடி! கள்ளி!!”

”நான் கள்ளியில்லை. அவன் தான் என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்ட கள்வன்!”

”சரி சரி, மேலே சொல்!” என்றாள் தோழி ஆர்வத்தோடு.

என்னைச் சந்தித்து ஆசை வார்த்தைகள் பேசினான். மறக்கமாட்டேன்; உன்னைத் துறக்கமாட்டேன்; விரைவில் மணம் செய்துகொள்வேன் என்றெல்லாம் (நீர்த்துறையில்) சூளுரைத்தான்.

”அப்புறம்?”

”அப்புறமென்ன…ஆயிற்று இரண்டு மாதங்கள்! என்னைப் பார்க்கவே வரவில்லையடி!” என்று வேதனையோடு நெட்டுயிர்த்தாள் தலைவி.
”அப்படியா சேதி…? இதை முன்னமே என்னிடம் கூறியிருக்கக்கூடாதோ? இந்நேரம் உங்கள் திருமணத்தையே நடத்தி முடித்திருப்பேனே? போகட்டும்! அவன் சூளுரைத்தான் என்றாயே…அதற்கு வேறு யாராவது சாட்சி உண்டா?”

”சாட்சியா…அந்தக் கள்வனைத் தவிர வேறு சாட்சி ஏது? என்றவள் சற்று யோசித்துவிட்டு….ஆங்…..இன்னொரு சாட்சி இருக்கிறது!”

”அது என்ன உடனே சொல்!” - பரபரத்தாள் தோழி.

”அப்போது நீர்த்துறையில் மீனைப் பிடிப்பதற்காக நீரையே பார்த்துக்கொண்டிருந்த குருகு (நாரை) ஒன்று இருந்தது. அதுதான் ஒரே சாட்சி. ஆனால் அது வாய்திறந்து பேசாதே? சாட்சி சொல்ல வாராதே?” என்றாள் தலைவி கவலையோடு.

”நல்ல சாட்சி பிடித்தாயடி!” என்று நகைத்த தோழி, ”விரைவில் தலைவனைச் சந்தித்துப் பேசி இதற்கோர் நல்ல முடிவு காணவேண்டும்” என்று தனக்குள் தீர்மானித்து, ”அஞ்சாதே பெண்ணே! விரைவில் நல்லது நடக்கும்!” என்று தலைவிக்கு ஆறுதல் கூறி அவளைத் தேற்றினாள்.

தலைவி தோழியிடம் கூறிய செய்திகளே பின்வரும் குறுந்தொகைப் பாடல்.

திணை: குறிஞ்சி;
துறை: வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது;
பாடியவர்: கபிலர்.


’யாரு மில்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.’ (குறுந்: 25)

விளக்கம்: தோழி! தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாக இருந்தவர் வேறு ஒருவரும் இல்லை. அந்தக் கள்வன் ஒருவன்தான் இருந்தான். தலைவன் அப்பொழுது என்னை மணப்பேன் என்று கூறிய சூளுரையிலிருந்து தப்பினால் நான் என்ன செய்வேன்? தினையின் அடியைப் போன்ற சிறிய பசிய கால்களை உடைய, ஓடுகின்ற நீரில் ஆரல் மீனின் வரவை (உண்ணும் பொருட்டு) ஆவலோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்த நாரையும் அங்கே இருந்தது என்றாள் தலைவி. (அது சாட்சிசொல்ல வருமோ?!) :-)