Friday, October 3, 2014

கருணைக் கடலே...கலைமகளே!



 

வெள்ளத்தால் போகாத வெந்தணலால் வேகாத செல்வம் கல்விச் செல்வம் ஒன்றேயாகும். ஏனைய செல்வங்கள் எல்லாம் கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடும்; கல்வி ஒன்றே மற்றவர்க்கு வழங்க வழங்க (அதனைத் தருபவனுக்குக்) குறையாது மிகும். செல்லும் இடமெல்லாம் சிறப்புப் பெறுவதும்; செல்லும் தேயமெல்லாம் புகழ் பெறுவதும் கற்றாரே.

கல்வி எனும் உயரிய செல்வத்தை வாரி வழங்கும் தெய்வமாகக் கருதப்படுபவள் நான்முகனின் நாயகியாகிய கலைவாணி. கல்வியேயன்றி ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விப்பவள் அவள். 

மனிதர்களின் நாவில் அந்தக் கலைமகள் நிலைத்திருப்பதாக நம்பப்படுகின்றது. அதனாலேயே அவள் ’நாமகள்’ என்று தமிழிலும் ’வாக்தேவி’ என்று வடமொழியிலும் அனைவராலும் அழைக்கப்படுகின்றாள். கொள்ளை இன்பத்தை மனிதர்க்குத் தருகின்ற பாவலர்களின் கவிதையிலும், இனிய குரலில் மாதர்கள் பாடும் பாட்டிலும் விரும்பிப் பவனி வருபவள் அவள். 

தன் திருக்கரத்தில் மாணிக்க வீணையேந்தி அதன் ஒலியில் மகிழ்ந்திருக்கும் அந்த மாதரசி, மழலை மிழற்றும் கிள்ளையின் நாவிலும், கீதமினிய குயிலின் குரலிலும்கூட விருப்பமொடு வாசம் செய்பவள் என்கிறார் மகாகவி பாரதி. 

கலைவாணியைப் போற்றுமுகத்தான், ‘நாமகள் இலம்பகம்’ எனும் பெயரோடு ’நா வீற்றிருந்த புலமா மகளோடு….” என்ற அடியை ஆரம்பமாகக் கொண்டே ஐம்பெருங்காப்பியங்களில் சிறந்த ஒன்றான சீவக சிந்தாமணி தொடங்குகின்றது. சாத்தனாரின் மணிமேகலையிலும் ஆபுத்திரனின் வரலாற்றைக் கூறும் பகுதியில் ’சிந்தா தேவி’ எனும் பெயரால் கலைமகள் குறிக்கப்பெறுகிறாள்.

அவ்வரலாறு இதோ…

தன் வளர்ப்புத் தந்தையான இளம்பூதி என்பவனால் கைவிடப்பட்ட ஆபுத்திரன் எனும் அந்தண இளைஞன் செல்வர்கள் பலர் வாழ்ந்த மதுரை நகரின்கண் பிச்சை வாங்கிக் குருடர்கள், முடவர்கள் முதலிய உடற்குறையுடையோர்க்கெல்லாம் முதலில் அளித்துவிட்டு மீதமிருந்த உணவைத் தான் உண்டு, அவ்வூரிலே இருந்த ‘சிந்தா தேவி’யின் கலை நியமத்தில் (கோயில்) தங்கியிருந்தான். 

மாரிக் காலத்து நள்ளிருள் வேளையில் ஒருநாள், சில ஏழை மக்கள் ஆபுத்திரன் தங்கியிருந்த சிந்தாதேவிக் கோயிலுக்கு வந்து அவனிடம் தங்கள் பசிக்கொடுமையைக் கூறி உணவளிக்கும்படி வேண்ட, பிச்சையாய்ப் பெறும் உணவேயன்றி வேறு உணவு ஏதுமில்லாத தன் வறுமை நிலையை அவன் அவர்களுக்கு வேதனையோடு விளக்க, ஆபுத்திரன் உணவளிப்பான் என்று நம்பிவந்த அந்த ஏழை மக்கள் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர்.

மற்றவர்களின் பசிப்பிணியைத் தீர்க்க இயலாத தன் வறுமை நிலையை எண்ணி அவன் வருந்தியிருந்த அவ்வேளையில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது! ஆம்…நியமத்தில் சிலையாயிருந்த சிந்தா தேவி உயிர்பெற்றாள்; ஆபுத்திரன் அருகே ஓர் பாத்திரத்தோடு அவள் தோன்றி, ”வருந்தாதே! இதோ என் கையிலுள்ள ஓட்டினைக் கொள்வாய்; நாடு வறுமையுற்றாலும் இந்த ஓடு வறுமையுறாது. இதிலிருந்து வரும் அளவிலா உணவை வாங்குவோர் கைகள்தான் வருந்துமேயின்றி; இதில் உணவு ஒருநாளும் குறைவுபடாது” எனக்கூறி அந்த அமுதசுரபியை ஆபுத்திரனுக்கு அளித்தாள்.

தேவி சிந்தா விளக்குத் தோன்றி
ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய்
நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது
வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது
தான்தொலை வில்லாத் தகைமைய
தென்றே. (மணி: பாத்திர மரபு கூறிய காதை)

சிந்தா தேவியை நேரில் கண்ட அதிசயத்தில் வாயடைத்துப்போன ஆபுத்திரன்,
”சிந்தையில் உறையும் தேவியே, கலைக்கோட்டத்தில் வீற்றிருக்கும் நந்தா விளக்கே, நாமகளே, வானோர்க்கெல்லாம் தலைவியே, மண்ணோர்க்கெல்லாம் முதல்வியே மக்களின் இடர்கள் அனைத்தையும் நீ களைவாயாக!” என்று அவளைத் தொழுது வணங்கினான்.

சிந்தா தேவி செழுங்கலை நியமத்து
நந்தா
விளக்கே நாமிசைப் பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி
ஏனோர் உற்ற இடர்களை வாய்..”
(மணி: பாத்திர மரபு கூறிய காதை)

கிடைத்தற்கரிய அந்த அமுதசுரபியின் உதவியோடு மக்களின் பசியைப் போக்கிவந்தான் ஆபுத்திரன் என்கிறது மணிமேகலைக் காப்பியம். 

இதன்மூலம் கல்விக்குத் தெய்வமான கலைமகள் கருணைக்கும் பிறப்பிடமாக இருந்ததை உணரமுடிகின்றது அல்லவா?

கலைவாணியின் மகிமையை உணர்த்தும் மற்றொரு நிகழ்வு…

முருகன் அருளால் பேசிய குழந்தையாகக் கருதப்படும் குமரகுருபரர் புண்ணியத் தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் காசித் திருத்தலத்தில் ஓர் சைவமடத்தை நிறுவும் ஆசை கொண்டார். அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்துவந்த முகலாய மன்னரிடம் (ஷாஜஹான்?) அதுகுறித்துத் தன் கோரிக்கையை வைக்க விரும்பினார். ஆனால் அவருக்கோ மன்னருடன் உரையாடுவதற்குத் தேவையான ஹிந்துஸ்தானி மொழி தெரியாது; மன்னருக்காவது நம் தமிழ் மொழி தெரியுமா என்றால் அவருக்கும் தமிழ் தெரியாது. 

இந்தச் சங்கடமான சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்று யோசித்தார் குமரகுருபர சுவாமிகள். அவர் மனத்திலே திடீரென்று ஓர் எண்ணம் மின்னலாய் உதித்தது. ஹிந்துஸ்தானி மொழியில் புலமை பெறுவதற்குக் கலைமகளின் அருளை உடனடியாக நாடினால் என்ன? என்பதே அது. உடனே சகலகலாவல்லியான சரஸ்வதியின் அருள்வேண்டிச் ’சகலகலாவல்லி மாலை’ என்னும் தெள்ளுதமிழ்ப் பாக்களைக் கொண்ட பதிகத்தைப் பாடிமுடித்தார். அப்பாடல்கள் அனைத்துமே சுவாமிகளின் தமிழ்ப் புலமைக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளன.

சான்றாகச் சில:

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.

இப்பாடல்களின் சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் சிந்தாதேவியே தன் சிந்தையைப் பறிகொடுத்தாள் போலும். குமரகுருபரரின் விருப்பத்திற்கேற்ப ஹிந்துஸ்தானி மொழிப்புலமையை அவருக்கு நல்கினாள். அவரும் மன்னரைக் கண்டு உரையாடிக் காசியில் ஓர் மடத்தை நிறுவினார் என்று ஆன்மிக அருளாளர்கள் கூறுகின்றனர். அம்மடம் ‘காசிமடம்’ எனும் பெயரால் இன்றும் காசி நகரில் காட்சியளிக்கின்றது.

வேண்டுவார்க்கு வேண்டுவனவற்றை நல்கும் இக்கலைத் தெய்வத்தை, கருணைக் கடலை அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி என்கிறார் கல்வியில் பெரியவரான கம்பர் தன் சரஸ்வதி அந்தாதியில். எனவே கல்வியிலும், கலைகளிலும் சிறந்து விளங்க நாமும் எல்லையில்லா அருள்முதல்வியான கலைமகளை ஒன்பான் இரவுகளின் (நவராத்திரி) ஒன்பதாம் நாளான வாணி பூசையன்று துதித்துப் பயன்பெறுவோம்.