Tuesday, October 6, 2015

தமிழின் பெருமையைத் தரணிக்கு உணர்த்தியவர்


நம் அன்னை பூமியாம் பாரதம் பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற மக்களைத் தன்னகத்தே கொண்டது. வேற்றுமைகளுக்கிடையே காணக்கிடைக்கின்ற இந்த ஒற்றுமைப் பண்பே அதன் சிறப்பாகும் என்பது அறிஞர்கள் துணிபு.

மகாகவி பாரதியும், ‘செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்என இந்தியத்தாயின் இயல்பை விதந்தோதியிருக்கின்றார். எனினும், எல்லா மொழிகளுக்கும் ஒரே மாதிரியான மதிப்பும் செல்வாக்கும் மக்களிடத்து நிலவுகின்றதா என்று சிந்தித்துப் பார்த்தால்இல்லைஎன்ற விடையை எளிதில் சொல்லிவிடலாம்.

தேவ பாஷையான வடமொழியே (சமஸ்கிருதம்) உயர்ந்தது; அதிலிருந்துதான் தமிழ் உள்ளிட்ட பிற திராவிட மொழிகளனைத்தும் தோற்றம் பெற்றன என்ற எண்ணம் முற்காலத்தில் நம் மக்கள் மனத்தில் ஆழ வேரூன்றியிருந்தது. அந்தோ! பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இந்நிலையே நீடித்தது.

தாய்மொழியின் தகுதியறியாத தம் புதல்வர்களின் அவலநிலைகண்டு கவலையோடு கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்த தமிழன்னையின் துயர்துடைத்து, அவளின் தன்னேரிலாச் சிறப்பை, பிற மொழிகளின் தயவின்றித் தனித்தியங்கும் தகைமையைத் தரணிக்கு உணர்த்தினார் ஓர் மொழியியல் அறிஞர்!

அச்சான்றோர் வேறுயாருமல்லர்! 1814-ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில்
கல்வி பயின்று, 1838-ஆம் ஆண்டு (தம்முடைய 24-ஆம் அகவையில்) கிறித்தவச் சங்கத்தொண்டராய் (An Evangelist Missionary) சென்னை மாநகருக்கு வந்து, 53 ஆண்டுகள் தமிழகத்தின் திருநெல்வேலியிலுள்ளஇடையன்குடிஎனும் சிற்றூரிலேயே தங்கிச் சமயத்தொண்டோடு அருந்தமிழுக்கும் அளப்பரிய தொண்டாற்றிய இராபர்ட் கால்டுவெல் (Bishop Robert Caldwell) எனும் பெருமகனாரே அவர்.

பெற்ற மகவைப்போல் தம்மைப் போற்றிப்பேணிய நெல்லைச்சீமையின் வரலாற்றை (A Political and General History of the District of Tinnevelly) வரன்முறையாக முதன்முதலில் எழுதிய பெருமைக்குரியவர் அவரே. பாண்டிய நாட்டின் பழம்பெருமையினைப் பரக்கப் பேசுகின்றது அந்நூல்.

அந்நூலிலிருந்து சில பகுதிகள் நம் கவனத்திற்கு

பாண்டிய நாட்டின் முக்கியத்தொழிலாய் முற்காலத்தில் திகழ்ந்தது முத்துக் குளித்தலே (முத்துச் சலாபம்) ஆகும். நெல்லையைச் செல்லமாய் ஊட்டி வளர்த்த தாயான தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தருகேதான் பாண்டியரின் புகழ்பெற்ற கொற்கைத் துறைமுகம் அன்று அமைந்திருந்தது. உலகறிந்த பெருந்துறைமுகமான கொற்கையிலே நன்முத்துக்கள் மிகுதியாய் விளைந்தன. அழகாய் உருண்டு திரண்டிருந்த அம்முத்துக்களின் அழகில் உள்ளூர் அரிவையர் தொடங்கி உரோமாபுரி அரசிகள்வரை மனம் மயங்கினர். புலவர்பெருமக்களும்பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்துஎன்று அதன் சிறப்பைப் போற்றினர். இத்துணைப் புகழ்வாய்ந்த கொற்கைத் துறைமுகம் பின்னாளில் தூர்ந்துபோனபின்காயல்எனும் கடற்கரையூர் சிறந்த துறைமுக நகரமாயிற்று. அத்துறைமுகத்திற்கு அரேபிய, சீனக் கப்பல்கள் வந்துசென்றிருக்கின்றன என்று குறிப்பிடும் கால்டுவெல், அத்துறைமுகத்தில் பரதவர் முத்துக்குளிப்பதையும் விவரமாகத் தம் நூலில் பதிவுசெய்திருக்கின்றார் என அறிகின்றோம்.

அதுபோல், காவிரியாறு கடலோடு கைகுலுக்கும் இடத்தில் அமைந்திருந்த செழிப்பான துறைமுக நகரம் காவிரிப்பூம்பட்டினம். அத்துறைமுகத்தின் வழியாக அன்று வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியாயிற்று. அரிசி என்று நாம் தமிழில் வழங்குவதையே கிரேக்க மொழியில்அருஸாஎனச் சிதைத்து வழங்குகின்றனர். இதன் அடியாகத் தோன்றியதே ஆங்கிலச் சொல்லானரைஸ்என்பதையெல்லாம் முதலில் நமக்கு ஆய்ந்துசொன்னவர் கால்டுவெல் ஆவார்.

மயிற்தோகையும் அன்று தமிழகத்திலிருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயிற்று; கூடவேதோகைஎன்ற சொல்லும்! ஹீப்ரு மொழியிலுள்ள பைபிளில் காணப்படும்துகிஎன்ற சொல் நம் தமிழ்ச்சொல்லானதோகையின் திரிபே என்று விளக்கியுள்ளார் கால்டுவெல். அவ்வாறே பிறமொழிகளில் சிதைந்து வழங்கும் பல தமிழ்ச்சொற்களை நம்மவர்க்கு அடையாளம் காட்டினார் அவர்.

கால்டுவெல் பன்மொழிகள் கற்ற பேரறிஞர். மேனாட்டுச் செம்மொழிகளான கிரீக், இலத்தீன், ஹீப்ரு ஆகியவற்றை இளம் வயதிலேயே கற்றிருந்த அவர், இந்தியா வந்ததும் ஆரியத்தையும், தென்மொழியான தமிழையும் ஆர்வத்தோடு பயின்றார். ஜெர்மானிய அறிஞர்கள் இந்திய மொழிகள் குறித்து எழுதியிருக்கும் ஆராய்ச்சி நூல்களைக் கற்கவேண்டும் எனும் வேட்கை உந்தித்தள்ள, ஜெர்மானிய மொழியையும் அவர் கற்றுத்தேர்ந்தார்.

மொழிநூல் ஆராய்ச்சி என்பது இயல்பிலேயே அவருக்கு விருப்பமான ஒன்று. ஆதலால் தென்னிந்திய மொழிகள் குறித்து ஆராயத் தலைப்பட்டார். அவ்வாராய்ச்சியின் விளைவே இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஒப்பற்ற ஒப்பிலக்கண நூலானதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) எனும் அரிய புதையல்!

ஆரிய மொழிகளின் இலக்கணம் வேறு; திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு என்பதைத் தம் ஒப்பிலக்கணத்தில் தெள்ளத்தெளிவாய் விளக்கியுள்ள கால்டுவெல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றே; ’இவையனைத்தினும் மூத்தமொழி தமிழேஎன்பதையெல்லாம் தக்க சான்றுகளுடன் இந்நூலில் நிறுவியுள்ளார். தென்னிந்திய மொழிகளைக் குறிக்கும் பொதுச்சொல்லாக திராவிட மொழி என்ற பதத்தை அவர் உருவாக்கினார். அன்றுமுதல்திராவிடம்என்ற சொல் (It is a Sanskrit word for ‘southern’) மொழிநூல் உலகில் நிலைபேறடைந்துவிட்டது. (இன்று அந்தச்சொல் படும்பாட்டை நல்லவேளை கால்டுவெல் பார்க்காது போய்விட்டார்!)

தமிழின் தற்சார்புத் தன்மையை விளக்க விரும்பிய கால்டுவெல், சங்க காலத்தில் தமிழ்நூல்களில் ஆரியச் சொற்களின் கலப்பு அருகியிருப்பதையும் பிற்காலத்தில் அச்சொற்களின் கலப்பு மிகுந்திருப்பதையும் சுட்டிக்காட்டி, ”எல்லாக் கருத்துக்களையும் வெளியிட ஏற்ற சொற்கள் தமிழிலேயே நிறைந்திருந்தும் அவற்றைப் புறந்தள்ளிவிட்டு ஆரியச் சொற்களையே நம் தமிழ்மக்கள் தேடிப் பயன்படுத்தியதால்தான் காலப்போக்கில் பல தமிழ்ச்சொற்கள் இறந்தொழிந்தன என்று குறிப்பிடுகின்றார்.

இவைபோல் இன்னும்பல ஆழமான கருத்துக்களைத் தம் ஒப்பிலக்கண நூலில் ஆய்ந்து வெளியிட்டிருக்கும் கால்டுவெல், திராவிட மொழிகளுக்குப் புத்துயிரூட்டிய தீரர்; திராவிட மொழிகளின் தொன்மையை, அவற்றின் மாண்புகளை மேனாட்டார்க்கும் செப்பமாய் எடுத்துக்காட்டிய செம்மல்  எனில் சற்றும் மிகையில்லை.

அடிப்படை வசதிகள்கூட அற்ற, அனல்பறக்கும் வறள்நிலமானஇடையன்குடிஎனும் கிராமத்தில் ஓர் கூரைவீட்டில் வாழ்ந்தவண்ணம் பெரிய ஆராய்ச்சிகளைச் செய்து, அரிய உண்மைகளை கால்டுவெல் வெளியிட்டிருப்பது வியக்கற்பாலது. அத்தோடு அங்கிருந்த விளிம்புநிலை மக்களுக்கு எழுத்தறிவித்த இறைவனாகவும் அவர் திகழ்ந்திருக்கின்றார். மேனாட்டாராக இருந்தும் மாமிசம் புசிக்காது காய்கனிகளையே உணவாக உண்டு எளிமையாய் வாழ்ந்திருக்கின்றார்.

தமிழகத்திலிருந்தபோது, மொழியாராய்ச்சியோடு அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபட்ட கால்டுவெல், கொற்கைக்கு அருகில் புதையண்ட கட்டடங்களின் அடிப்பகுதி, பாண்டிய நாட்டு மீன்சின்னம் பொறித்த நாணயங்கள், உலோகக் கலயங்கள் போன்ற பல தொல்பொருள்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.

அயலகத்தில் பிறந்தாலும் தம் ஆர்வத்தின் காரணமாக அரிதின் முயன்று தமிழ் பயின்று, ’தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியே; அஃது ஆரியத்தைச் சார்ந்ததன்றுஎன்பதைத் தம் மொழிநூல் ஆராய்ச்சிகளின் வாயிலாய் அறிந்து அதனை வையத்து மாந்தர்க்கும் ஐயமற விளக்கிய கால்டுவெல்லின் அருந்தொண்டு தமிழ்கூறு நல்லுலகில் குன்றிலிட்ட விளக்காய் என்றும் சுடர்விட்டு ஒளிரும்.


No comments:

Post a Comment