Wednesday, April 23, 2014

பாவேந்தரின் நகைச்சுவை!

 
தமிழகத்தின் அன்றைய நிலையை (ஏன்...இன்றைய நிலையும் அப்படித்தான் இருக்கிறது!) மிக அழகாகத் தன் கவிதை வரிகளில் காட்சிப்படுத்துவதில் பாவேந்தரை விஞ்சிய ஒரு தமிழ்க் கவிஞன் இல்லை இன்றுவரை! தமிழ் அவர் கரங்களில் பூனைக்குட்டிபோல் கொஞ்சி விளையாடியது; இழுத்த இழுப்பிற்கு வளைந்து கொடுத்தது! 

நம் மக்களிடம் நெடுங்காலமாக மாற்றமுடியாமல் இருக்கும் ஒரு பழக்கம், வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டால் நகைகளை அள்ளிப் போட்டுக்கொள்வதும், விலையுயர்ந்த ஆடைகளை அணிந்துகொள்வதும்! எளிமை என்பதை ஏட்டில் எழுதிப் பார்க்கவும் பலர் விரும்புவதில்லை. (எளிமை விரும்பியான) இறைவனைத் தொழுவதற்கு ஆலயம் செல்லும்போதும் இதே நிலைதான்!

இதையெல்லாம் கண்ணுற்ற பாரதிதாசன் நகைச்சுவையோடும்…அதே நேரம் மக்களுக்கு புத்தி புகட்டும் வகையிலும் ஓர் அழகிய பாடலை இயற்றியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த பாவேந்தரின் பாடல்களில் இப்பாடலுக்கு எப்போதும் ஓர் முக்கிய இடமுண்டு!!  

’ஏசுநாதர் ஏன் வரவில்லை?’ என்பது அப்பாடலின் தலைப்பு. தலைப்பே வேடிக்கையாக இருக்கிறதல்லவா? பாடலிலும் ’பகடி’ கபடி விளையாடுகின்றது!

பாடலின் கருத்து: தேவாலயத்தில் எளிமையை விரும்பும் பாதிரியார் ஒருவர் ஒருநாள், “இனிமேல் யாரும் தலை, காது, மூக்கு, கழுத்து, கை, மார்பு, விரல், கால் போன்ற எட்டு உறுப்புக்களிலும் நகைகள் அணிந்துகொண்டு வந்து தேவகுமாரனைத் தரிசிக்கக் கூடாது! அதுமட்டுமல்ல….ஆடம்பரமான ஆடைகளும் உதவாது; எளிமையான, விலைமலிவான ஆடைகளை அணிந்துவந்தால்தான் தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்படுவீர்கள்” இல்லையென்றால் no entry" என்று (தெரியாத்தனமாக) ஓர் உத்தரவு போட்டுவிட்டார்!

உத்தரவு போட்டதுதான் தாமதம்…அதன்பிறகு தேவாலயத்தின் பக்கம் ஓர் ஈ, காக்காய் கூட எட்டிப் பார்க்கவில்லை. தேவாலயமே வெறிச்சோடிப் போனது; வெலவெலத்துப்போனார் பாதிரியார்.

நீண்ட நேரம் (குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி) ஆழ்ந்த யோசனை செய்துவிட்டுத் தேவாலய வாசலில் ஓர் அறிவிப்புப் பலகை வைத்தார். அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்…”இனிமேல் பக்தகோடிகள் அனைவரும் தலை, காது உள்ளிட்ட எட்டுறுப்புக்கள் மட்டுமின்றி இமைகள், உதடு, நாக்கு போன்ற உறுப்புக்களிலும் நகைகள் போடலாம்! அதுமட்டுமா? நீங்கள் உங்கள் அழகைப்(!) பார்த்து ரசிப்பதற்கு வசதியாகப் புதிதாக ரசம்பூசப்பட்ட பளபளப்பான ஆளுயரக் கண்ணாடி ஒன்றும் (உடனடியாகத்) தேவாலயத்தில் மாட்டப்படும்!”

அறிவிப்பைப் படித்தனர் மக்கள்; மகிழ்ச்சியில் மலர்ந்தன அவர்தம் முகங்கள்! அலைகடலெனத் திரண்டுவந்தனர் தேவாலயத்திற்கு. ஆனால் ஒருவர்மட்டும் தேவாலயத்திற்கு வரமறுத்துவிட்டார்! அவர் யார் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா? அவர்தான் ’ஏசுநாதர்!’

கோயிலுக்குச் செல்லும்போதேனும் நம் மக்கள் எளிமையைக் கடைப்பிடிக்கக் கூடாதா என்ற பாவேந்தரின் ஏக்கமே இந்தப் பாடல்!

தலைகாது மூக்கு கழுத்துகை மார்புவிரல்
தாள்என்ற எட்டுறுப்பும்
தங்கநகை வெள்ளிநகை ரத்தினமி ழைத்தநகை,
தையலர்கள் அணியாமலும்,
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென் றேபாதிரி
விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள்புருஷர்!
நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப் பேயன்றி
நீள்இமைகள் உதடுநாக்கு
நிறையநகை போடலாம் கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணா டியும்உண்டென
இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்துசேர்ந்தார்
ஏசுநா தர்மட்டும் அங்குவர வில்லையே
இனியபா ரததேசமே!

இதைத்தான் ”ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை” என்று குறிப்பிடுகிறார் கவியரசர்! 



இயற்கை அன்னையின் இனிய மகள்!














 

(சித்திரையைப் போற்றிப் பாடிய கவிதை!)
 
பகலவன் கதிரெனும் கம்பளம் விரிக்க
அகலுதே காரிருள் அகிலத்தை விட்டு!
மயில்களும் தோகையால் சாமரம் வீசக்
குயில்களும் இனிமையாய்க் கானங்கள் பாட

மன்றல் கண்டநல் சித்திரைப் பெண்ணும்
தென்றல் தேரிலே உல்லாச மாக
வசந்த நாயகன் வலக்கரம் பற்றிக்
கசந்த காலங்கள் மாற்றிட வந்தாள்!

எழில்மகள் அவளை வாழ்த்த விரும்பியே
பொழிந்தன மலர்களும் மாரியாய் எங்கும்!
இயற்கை அன்னையின் இனிய மகளிவள்
இன்பம் நல்கவே இங்கு வந்தனள்!

ஓடிப் போனது துயரங்கள் என்று
ஆடிப் பாடினர் மாந்தர்கள் எல்லாம்!
தோரணம் கட்டுங்கள் வாயில்கள் தோறும்
ஆரணங் கிவளை அன்பொடு போற்றியே!



பாடுபொருள்















 



(எழுது)கோலைக் கையில் பற்றிய படியே
 (கவி)பாடு பொருள்தனைச் சிந்தித் திருந்தேன்!
காலைக் கதிரோன் ஒளிமுகம் காட்டி
 ஏந்திழையே எனைப் பாடுக என்றான்!

காலை ஆட்டித் தூங்கும் குழந்தையோ
 நானே கவிதை அறிகிலை நீஎன,
கோலம் போட்டு நிமிர்ந்த அன்னையின்
 முறுவல் கூடக் கவிதையாய்த் தோன்றச்

சாலை யோரம் நின்ற மரங்கள்
 மங்கையே என்னைப் பாடுவாய் என்றன!
சேலை யணிந்து சென்ற பெண்ணோ
 நடக்கும் கவிதை(நான்) எனைப்பா டென்றாள்!

வாலை ஆட்டியே சென்ற நாயுமென்
 நன்றி குணத்தைப் போற்றிப்பா டென்றது!
வேலையில் மூழ்கிப் போனத னாலே
 கவியெழு திடநான் மறந்தஅவ் வேளையில்

மாலை மயங்கி இருளும் வந்தது
 கோல நிலவும் குளிர்முகங் காட்டி
வாலைக் குமரியே எனை மறந்தனையே….
 வடித்திடு கவியொன் றென்மேல் என்றது!

இயற்கை அன்னையின் இனிய அழகில்
 பாடு பொருளுக்கோர் பஞ்சமு மில்லை!
வியக்க வைத்திடும் அவளின் படைப்பில்
 ஒவ்வொரு பொருளும் கவிதையே அன்றோ!!


அன்றும் இன்றும்!

இடும்பைக் கஞ்சாது இன்னலில் துவளாது
 நாட்டுக் குழைத்தனர் அன்று! – தம்
குடும்பம் செழிப்பதே கொள்கையென் றானபின்
 மற்றோரை மறந்தனர் இன்று!

அரசியல் பிழைத்தோரை அறமே கூற்றமாய்
 அழித்து ஒழித்தது அன்று!
அரசியல் என்றேநல் லறத்தைக் கொன்றிட்டுப்
 பிழைப்புச் செய்கின்றார் இன்று!

விலங்கொன்று கேட்டதற் கேநீதி நல்கினான்
 மனுநீதி மன்னனும் அன்று!
கலங்கிநின் றழுதிடும் மக்களே கேட்பினும்
 எட்டாக் கனியது இன்று!

வெல்லமாய் இனித்திடும் நம்தமிழ் சிறந்திடக்
 காவியம் பலகண்டார் அன்று!
கல்வியில் தமிழினிக் கூடாதென் றெண்ணியே
 ’சிலையினில் தமிழ்கண்டோம்’ இன்று!!

உற்றாரும் பெற்றோரும் கூடியே யிருந்ததால்
 பிள்ளைகள் சிறந்தனர் அன்று!
சுற்றமும் நட்புமே கணினியென் றானபின் – நற்
 பண்புகள் பறந்தன இன்று!

நாக ரிகம்தனை உலகுக் குணர்த்தினர்
 தமிழச் சாதியார் அன்று!
போகத்தின் மீதிலே மோகங்கொண் டலைவதால்
 ஒழுக்கத்தை மறக்கின்றார் இன்று!

அன்றும் இன்றுமே நாட்டின் நிலைதனைப்
 பாட்டில் எழுதிட நீளும்..….
நன்னெறி நின்றுநம் ’மொழியினைக் காத்தால்’
 நாளைய வரலாறு போற்றும்!


Monday, April 21, 2014

நாதனைக் கண்டேனடி!


 
இடது பதம்தூக்கி ஆடியே என்னுளத்தில்
 இன்பகீதம் இசைத்தா னடி!
விடமுண்ட கண்டனாம் விண்ணுலக வேந்தனாம்
 விந்தையென்ன சொல்வே னடி!

நடராசன் என்றபெயர் கேட்டிட்ட நாள்முதலாய்
 நங்கையென்பேர் மறந்தே னடி!
கடலளவு ஆசைதான் அவன்மீது பெருகுதே
 கன்னியென்னைக் காண்பா னோடி!

உண்ணவும் மறந்தேனே உன்மத்தம் கொண்டேனே
 உறக்கத்தைத் தொலைத்திட் டேனே!
கண்காட்டும் பொருளெல்லாம் பரம்பொருளாய்த் தோன்றுதே
 கண்கட்டு வித்தை என்பதோ?!

தில்லையிலே கோயில்கொண்டு திருநடம் புரிபவன்என்
 உள்ளமதில் உறைந்தா னடி!
வல்லிஎந்தன் நெஞ்சிலே நேற்றுவந்த கனவினில்என்
 நாதனைக் கண்டே னடி!

புலியாடை தரித்தவனோ புன்னகைதான் சிந்திட்டான்
 பேரின்பம் கொண்டே னடி!
சிலசொற்கள் அவனுந்தான் செந்தமிழில் செப்பிட்டான்
 செவியினிலே பாய்ந்ததடி தேன்!

எத்தனை பிறவிகள்நான் எடுத்தாலும் பிறையணிந்த
 பித்தனை மறவே னடி!
நித்தமும் ஐந்தெழுத்தை ஓதியே மகிழ்ந்திடுவேன்
 சித்தங்களி கொள்ளு மடி!